ஞாயிறு, 3 ஜூலை, 2016

அப்பூதியடிகள் வரலாறு.

            நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகள்.

         அப்பூதியடிகள் சோழ நாட்டில் திங்களூரில் வசித்தவர். மிகுந்த சிவ பக்தரான இவர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதன்மையான நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார் காலத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

            திருநாவுக்கரசர் சைவ சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளையும், அதனால் அவருக்கு நேர்ந்த துன்பங்களையும், அவற்றையெல்லாம் இறை நம்பிக்கையைத் துணைக்கொண்டு வெற்றிகரமாகக் கடந்ததையும் கேள்விப்பட்டு அவர்மீது அளவுகடந்த பக்தி கொண்டார் அப்பூதியடிகள்.
             இதுவே அவரை ஒரு நாயன்மாராக மதிக்கப்படும் அளவுக்கு உயர்த்தியது.  தாம் அமைத்த திருமடம், தண்ணீர்பந்தல் முதலியவற்றிற்கும் திருநாவுக்கரசர் பெயரையே வைத்து அளவிலா அற செயல்கள் புரிந்து வந்தார்.
           திருநாவுக்கரசர் ஸ்வாமிகள் பல சிவஸ்தலங்களை தரிசிக்க வேண்டி திங்களூர் வழியாக வந்தார். அங்கு தமது பெயர் சூட்டிய ஒரு தண்ணீர் பந்தலை கண்டார், அப்பூதியடிகள் புரிந்த தர்மங்களை மற்றவர்களிடம் கேட்டு அறிந்து திருநாவுக்கரசர் அங்கிருந்து புறப்பட்டு அப்பூதியடிகளின் வீட்டு வாசலை அடைந்தார். திருநாவுக்கரசருடைய திருவடிகளை அப்பூதியார் வணங்கினார்.
           அதன் பின் அப்பூதியடிகளார் திருநாவுக்கரசரை தம் வீட்டிற்கு அழைத்து சென்று அவர் தம் திருவடிகளை தமது மனைவி மக்களுடன் வாசனை நீரால் சுத்தம் செய்து மகிழ்ந்தார். சுவாமிகளை ஒரு பீடத்தில் அமர செய்து அன்னம் ஏற்கவேண்டும் என்று அப்பூதியடிகள் வேண்டினார். அப்பூதியடிகளார் மனைவி அறுசுவை கறிகளாக்கி இனிய அன்னம் வடித்து அமுதமாக்கினார். உணவு பரிமாற இலை விரிப்பதற்காக தம் பிள்ளைகளில் மூத்த மகனை கூப்பிட்டு வாழை இலை அரிந்து கொண்டு ஓடி வா என்று சொல்லி அனுப்பினார்.  

           அமுது பரிமாற இலை கொண்டுவரச் சென்ற அப்பூதியடிகளின் மூத்த மகன் பாம்பு தீண்டி இறந்து விடுகிறான். சிவனடியாரின் திருவமுதுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று கருதி மகனின் உடலை மறைத்து விட்டு, திருநாவுக்கரசரை உணவுண்ண வருமாறு அழைத்தார். திருநாவுக்கரசரும் மூத்த மகன் எங்கே என்று வினவினார். வேறு வழியின்றி உண்மையை உரைக்கிறார் அப்பூதியடிகள். அப்பூதியடிகளின் அன்பில் மனமுருகிய திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடி அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்தார்.
        அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக