இளையான்குடி மாறநாயனார் 63 நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி என்னும் ஊரில் ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் இளையான்குடியில் பிறந்ததால் இளையான்குடி மாறனார் என்று அழைக்கப்பட்டார்.
இவர் எந்நேரமும் நமச்சிவாய என்னும் திருமந்திரத்தை நினைத்துக் கொண்டிருப்பவர். இவரும், இவர் மனைவியும் தன் வீடு தேடி வரும் அடியார்களை வரவேற்று பாதபூஜை செய்து உணவளிப்பதையே பணியாக கொண்டிருந்தனர். இதனால் இவர்கள் வீட்டில் லட்சுமிதேவி நிரந்தரமாக குடியிருந்தாள்.
✫ அடியார்க்குத் திருவமுதளித்தலாகிய இத்திருப்பணியைச் செல்வக்காலத்திலே மட்டுமன்றி வறுமையுற்ற காலத்திலும் விடாது செய்யவல்லார் இவர் என்னும் உண்மையினை உலகத்தார்க்கு அறிவுறுத்த இறைவன் திருவுள்ளங் கொண்டார். இதனால் இவரின் செல்வம் குறைந்து வறுமை உண்டாகியது. இவ்வாறு செல்வம் சுருங்கினாலும், தம்மிடமிருந்த நிலங்களை விற்றும், கடன்வாங்கியும் அடியார்க்கு அமுதளிக்கும் பணியை விடாது செய்து வந்தார்.
✫ இவ்வாறு மாரிக்காலத்தில் ஒருநாள், தாம் உணவின்றிப் பசியால் வாடியபோதும் இரவு வெகுநேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும் வராமையால் கதவைப்பூட்டி விட்டு வீட்டினுள் சென்றார். நள்ளிரவுப் பொழுதிலே சிவபெருமான், அடியார் கோலங்கொண்டு இவரது மனைக்கு எழுந்தருளிக் கதவைத் தட்டி அழைத்தார். இவர் கதவைத் திறந்து அடியாரை வீட்டினுள் அழைத்து வரவேற்று மழையில் நனைந்த அவரது மேனியில் விழும் ஈரத்தை துவட்டச்செய்து ஆசனத்தில் அமர்த்தினார். சற்று பொறுங்கள் சூடாக உணவளிக்கிறேன் என்று கூறினார்.
✫ இந்த நிலையிலும் தனக்கு வந்த சோதனையை எண்ணி மனம் தளராமல் மனைவியிடம் அடியாரின் பசியைப் போக்குவது பற்றி விசாரித்தார். அந்நேரம் இவரது மனைவி, கழனியில் காலையில் விதைத்த நெல்லை எடுத்துவந்து குத்தி அரிசியாக்கி அடியாருக்கு உணவளிக்கலாம் எனக் கூறினார். இவரும் மழையைப் பொருட்படுத்தாமல் கழனியிலிருந்து நெல்லை எடுத்துவந்தார். இவர் மனைவி தோட்டத்திலிருந்த கீரையை பறித்து வந்து சூடாக உணவு சமைத்தார். பிறகு அடியாரை உணவருந்த அழைத்து அவரை வணங்கி எழுந்தபோது அடியாரைக் காணவில்லை.
✫ அப்பொழுது அடியாராக வந்திருந்த சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் எழுந்து தோன்றினார். அது கண்டு இருவரும் திகைத்து நின்றனர். சிவபெருமான் உமாதேவியாருடன் எருதின் மேல் தோன்றி, 'அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ உன் மனைவியோடும் என் பெரும் உலகமாகிய சிவலோகத்தினை அடைந்து பேரின்பம் அனுபவித்திருப்பாயாக" என்று அருள் செய்து மறைந்தருளினார்.
(அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக