சனி, 9 ஜூலை, 2016

திருவெறும்பூர் எறும்பீசுவரர் திருக்கோவில்.

           திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில்   
             திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில் திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும்.

              இக்கோவில் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும்.
                தல வரலாறு :  
         தாருகா சூரன் எனும் அரக்கன் மிகுந்த வரபலத்தால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் அஞ்சி பிரம்மனிடம் போய் முறையிட்டனர். பிரம்மன் அவர்களை பூலோகத்தில் உள்ள தென் கயிலாயமாகிய திருவெறும்பூருக்குச் சென்று இறைவனைப் பூசித்தால் தாருகனை அழிக்கக் கூடிய ஒரு புதல்வனை அருள்வார் என்று கூறினார் தேவர்களும், தாருகனுக்குப் பயந்து எறும்பு உருவம் கொண்டு இத்தலத்தை அடைந்து இறைவனைக் கண்டு தங்கள் குறைகளைக் கூறினார்கள். தேவர்களும், இந்திரனும் எறும்பு உருவம் எடுத்து சிவலிங்கத்தின் மீது ஊர்ந்து ஏறும்போது, ஏற முடியாமல் தவித்தனர். உடனே இறைவன் சற்றே தலை சாய்த்து, சரிந்து கொடுத்தான். இதனால்தான் இத்தலம் திரு எறும்பூர் என அழைக்கப்படுகிறது.
            தலை வணங்கிப் போற்றும் அடியார்க்கு இறைவனும், தலை வணங்கி அருள் செய்கிறான் என்பதை உணர்த்தவே இங்கு பெருமான் இன்றும் திருமுடி சாய்ந்து தலைவணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இறுதியில் தாருகா சூரனும் வதம் செய்யப்பட்டார்.

            கோவில் அமைப்பு :
      ✷ சுமார; 250 அடி உயரமுள்ள குன்றின் மீது கோவில் அமைந்துள்ளது. மேலே செல்ல 125 படிக்கட்டுகள். இடையே இளைப்பாற மண்டபங்கள் உள்ளன.
          ✷ குன்றின் கிழக்கு நுழைவாயிலின் இடதுபுறம் செல்வ விநாயகரும், வலப்புறம் ஆஞ்சநேயரின் சன்னதிகளும் உள்ளன. இங்கிருந்து பார்த்தால் திருச்சி மலைக்கோட்டையின் ரம்மியமான தோற்றம் கண்களைக் கவரும்.
         ✷ கோவிலுக்கு முன்னே கொடித்தூண், பலிபீடம் நந்தி மண்டபம் உள்ளன. கருவறைக்கு முன் முக மண்டபமும், அதனையொட்டி திருச்சுற்றும் உள்ளன.
          ✷ திருச்சுற்றில் முருகன், சப்த கன்னியர், பிள்ளையார், காசி விசுவநாதர், கஜலட்சுமி, சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள், ஆடல்வல்லான், சூரியன் ஆகிய தெய்வங்களை தரிசிக்கலாம்.
         ✷ கருவறையின் வெளிப்புறச் சுவரில் நர்த்தன விநாயகர், தட்சிணா மூர்த்தி, நான்முகன், துர்க்கை ஆகியோரது திருமேனிகளையும் காணலாம்.

            தல சிறப்புகள் :  
           முற்றிலும் கற்களால் அமைக்கப்பட்ட கருவறை கொண்டது இத்தலம். மூலவர் லிங்கம் மண்புற்று வடிவில் அமைந்துள்ளது. எனவே நேரடியாக அபிஷேகம் செய்யாமல், நீர்புகாதவாறு கவசம் பொருத்திய பின் அபிசேகம் செய்யப்படுகின்றது. வடபுறம் சாய்மானமாக உள்ள ஈசன் திருமேனி (எறும்புகள் ஊற இயலும் வண்ணம்) மேற்புறம் சொரசொரப்பாகவும் உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்களைக் இங்கு காணலாம்.
         அன்பு ஆத்மா த.சிவகிரி. ஓம் சிவார்ப்பணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக