பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் பூதத்தாழ்வர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள், முதலாழ்வார்கள் மூவருள் இரண்டாம் இடம் வகிப்பவர். இவர் கடல்மல்லை என்னும் மாமல்லபுரத்திலே, மல்லிகை தோட்டத்தின் நடுவே நீலோற்பவ மலர் ஒன்றில் சித்தார்த்தி ஆண்டு, ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில் திருமாலின் ஆயுதமாகிய கொளமேதகியின் (கதை) அம்சமாக தோன்றினார். இவர் காலம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
வரலாறு
✶ இவர் அனைத்துக் கலையிலும் வல்லவராக விளங்கினார். எம்பெருமானையே அல்லும், பகலும் மனத்தில் வைத்து வழிப்பட்டு வந்தார். திருமகள் இவரது நாவில் நின்று நர்த்தனமாடினாள். செந்தமிழைச் செழிக்கக் கற்று பைந்தமிழ்ப் பாசுரங்கள் பல பாடியருளினார். எப்போதும் பரமன் புகழ் பாடும் இவரைச் சுற்றி அன்பர் கூட்டம் தேன் உண்ணும் வண்டாக கூடி இருந்தனர். இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது.
✶ இவர் 'நமோ நாராயணா" என்னும் எட்டெழுத்து மந்திரம் தான் பேரின்பத்தை எட்டிப் பிடிப்பதற்கு ஏற்ற வழி என்பதை தானும் உணர்ந்து, உலகத்தாரையும் உணரச் செய்தார். உட்காரும் போதும், நிற்கும் போதும், உறங்கும் போதும், நடக்கும் போதும், உண்ணும் போதும் எம்பெருமானையே எண்ணி மகிழ்ந்தார். இவர் உலகப்பற்றை அறவே நீத்தவர். இவர் பொய்கையாழ்வார், பேயாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார்.
✶ இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். இறைவன், இவர்களால் உலகை உய்விக்கக் கருதி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில், இம்மூவரையும் ஒன்று சேர்த்துத் தானும் அவர்களுக்கிடையில் நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினார்.
✶ நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில் கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். இவர் அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.
அன்பு ஆத்மா த.சிவகிரி. ஓம் சிவார்ப்பணம்.
செவ்வாய், 5 ஜூலை, 2016
பூதத்தாழ்வார் வரலாறு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக