வியாழன், 16 ஜூன், 2016

ஆனாய நாயனார்!!! வறலாறு.

             நாயன்மார்களில் ஒருவரான ஆனாய நாயனார்!  ஆனாய நாயனார் சோழ நாட்டில் திருமங்கலம் என்னும் ஊரில் ஆயர் குலத்தில் பிறந்தவர். இவர்  தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டாற்றியவர். மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர். தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியில் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமல் காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிக் காத்துவருபவர்.
               ✶ இவர் ஒரு நாள் வழக்கம்போல் ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு, முல்லை நிலத்திற்குப் புறப்பட்டார;. அப்பொழுது கார் காலம்! முல்லை நிலம் பூத்துக் குலுங்கும் புது மலர்ச்சோலை போல் காட்சி அளித்தது. ஆங்காங்கே கொன்றை மரங்கள் புது மலர்களைத் தாங்கிய வண்ணம் எழிலுறக் காட்சி அளித்தன. இவர் முல்லை நிலத்தின் இயற்கை எழிலில், இன்பத்தை அளிக்கும் வண்ண மலர்களின் நறுமண வாசனையில் உள்ளத்தைப் பறி கொடுத்தார்.
            ✶ தம்மை மறந்து வேய்ங் குழலின் இன்ப இசையை இனிமையாக எழுப்பி வாசித்துக் கொண்டே இருந்தார். அப்பொழுது இவர் பார்வை கொன்றை மரத்தின் மீது பதிந்தது. அம்மரத்திலிருந்த மலர;கள் கொத்து கொத்தாக மாலை போன்ற வடிவத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. எந்நேரமும் சிவபெருமானைப் பற்றியும், திருவெண்ணீற்றை பற்றியும் எண்ணிக் கொண்டிருக்கும் இவர; கண்களுக்கு கொன்றை மரத்தின் வடிவத்தைப் பார்த்ததும் கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல் தோன்றியது. இவர் தாம் வைத்திருந்த வேய்ங்குழல் பலவற்றில் சிறந்த ஒன்றை எடுத்து, சிவபெருமானை நினைத்தபடியே பண் ஒன்றை எழுப்பினார்.
            ✶ இவர் சுத்த சுரத்திலே திருவைந்தெழுத்தை இசையுடன் அமைத்து முறையோடு சுருதி சேர்த்து வாசிக்கலானார். அது கற்பகப்பூந்தேனும், தேவாவமுதமும் கலந்து வார்ப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்று. மடிமுட்டி பால் குடித்து நின்ற பசுக்கன்றுகளும், எருதுக் கூட்டங்களும், காட்டுவிலங்குகளும் இசைவயப்பட்டுத் தம் உணவு மறந்து மயிர்சிலித்து இவரிடம் வந்து சேர்ந்தன. ஆடும் மயிலினமும், மற்ற பறவை இனமும் தம்மை மறந்து, நிறைந்த உள்ளமோடு பறந்து வந்து சேர்ந்தன.
            ✶ ஏவல்புரி கோவலரும் தமது தொழில் செய்வதை மறந்து நின்றனர், இவரின் குழலிசை அமுதம் சிவபெருமானின் திருச்செவியை அடைந்தது, மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் உமையம்மையாருடனே எழுந்தருளி, நாயனாருக்கு காட்சி கொடுத்து அவரது குழலிசையை எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்க, 'இந்நிலையிலே நீ எம்பால் அணைவாய்" என்றார;, நாயனாரும் அங்ஙனமே அணைந்தார்.(அன்பு ஆத்மா.த.சிவகிரி ஓம் சிவார்ப்பணம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக