செவ்வாய், 28 ஜூன், 2016

பஞ்ச நந்தி பெருமான் அறிவோமா!

          பஞ்ச நந்திபெருமான் பற்றிய தகவல்கள்.  
          பெரிய சிவாலயங்களில் ஐந்து வகையான நந்திகள் அமைந்திருப்பதைக் காணலாம். அவை இந்திர நந்தி, வேத நந்தி (பிரம்ம நந்தி), ஆத்ம நந்தி (கொடி மரத்தின் அருகில் உள்ளது), மால்விடை (மகாமண்டபத்தில் இருப்பது), தரும நந்தி என்பவையாகும்.
              இந்திர நந்தி :
✫ ஒரு சமயம் இந்திரன் இடப (காளை) வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். போகங்களின் அதிபதியாகிய, இந்திரன் வடிவாக விளங்கும் இந்த 'நந்தியைப் போகநந்தி" என்றும், 'இந்திர நந்தி" என்றும் அழைக்கின்றனர்;. இந்த நந்தியைக் கோயிலுக்கு வெளியே சற்று தொலைவில் கருவறையை நோக்கியவாறு அமைக்கின்றனர்.

               வேத நந்தி :
✫ பின்னர் ஒருமுறை பிரம்மதேவன் நந்தி வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். வேதனான பிரம்மன், நந்தி வடிவம் தாங்கியமையால் இந்த நந்தியை 'வேத நந்தி", 'வேத வெள்விடை", 'பிரம்ம நந்தி" என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். பிரம்மம் என்பதற்கு அளவிட முடியாத பெருமைகளை உடையது என்பது பொருளாகும். அதற்கேற்ப இந்த நந்தியை மிகப்பெரியதாகவும், கம்பீரமாகவும் அமைப்பர்.
                 ஆன்ம நந்தி :
✫ ஆலயத்தில் கொடி மரத்தையொட்டி தலைமை நந்தியாக அமையும் நந்தி 'ஆன்ம நந்தி" ஆகும். இது உலக உயிர்களான (பசுக்கள்) ஆன்மாக்கள் பதியாகிய சிவபெருமானைச் சார்ந்து, அவருடைய நினைவில் நிலைப்பெற்றிருக்க வேண்டிய தன்மையை உணர்த்துகிறது. சிவாலயத்தில் பிரதோஷக் காலங்களில் இந்த நந்திக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

                    மால் விடை :
✫ ஒரு சமயம் திரிபுராதிகளை வெல்லுவதற்காக தேவர்கள் சிவபெருமானுக்கு சிறந்ததொரு தேரினைச் செய்து கொடுத்தார்கள். தாங்கள் அளிக்கும் இந்தத் தேர் இல்லாமல் சிவபெருமானால் முப்புரங்களை வெல்ல முடியாது என எண்ணினார், அதை உணர்ந்த சிவபெருமான், அந்தத் தேர்தட்டின் மீது தன் வலது காலை ஊன்றி ஏறினார் அவ்வாறு அவர் ஊன்றிய போதே அத்தேரின் அச்சு மளமளவென்று முறிந்தது. தேவர்கள் தாங்கள் செய்தளித்த ஒப்பரிய தேர் பெருமானின் ஒரு கால் அழுத்தத்தைக் கூடத் தாங்க மாட்டாமல் முறிந்தது கண்டு, அஞ்சி பெருமானைத் தொழுதனர், அப்பொழுது திருமால் இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கி அவரை மகிழ்வித்தார். இந்நினைவு நீங்காது இருக்கும் பொருட்டு தானும் நந்தி வடிவம் கொண்டு, அவர் சன்னிதியில் நிலையாக எழுந்தருளினார். இந்த நந்தி சக்தி பதமான இரண்டாவது ஆவரணத்துள் அமைந்துள்ளதாகும். இதனை 'மால்விடை", 'மால்வெள்விடை" என்று பலவாறு அழைப்பர்.
                  தரும நந்தி :
✫ மகா மண்டபத்தில் அமையும் சிறு நந்தியே 'தரும நந்தி" என்பதாகும். பிரளயவெள்ளம் பொங்கிப் பெருகி வானளவு எழுந்து உலகினை அழிக்கும் அந்த சங்கார காலத்தில் யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கும், அப்போது தருமம் மட்டும் நிலைபெற்று இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கும். இவ்வாறு தன்னைத் தாங்கும் இடபத்தை பெருமான் ஆரத்தழுவிக்கொண்டார். இவ்வகையில் தரும நந்தியானது, இறைவனைப் பிரியாது அவருடனேயே இருக்கும். இதை உணர்த்தும் வகையில், இந்த நந்தி இறைவனுக்கு அருகாமையில் மகாமண்டபத்திலேயே எழுந்தருளியிருக்கின்றது.

           பெரிய ஆலயங்களில் இத்தகைய ஐந்து நந்திகள் இருப்பதைக் காண்கிறோம்.திருவண்ணாமலை, காஞ்சிபுரம் முதலான தலங்களில் பஞ்ச நந்திகள் சிறப்புடன் போற்றப்படுகின்றன.
    (அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக