ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் திருத்தம் திருநல்லாறு!


                திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் திருக்கோவில் பாடல்கள் பாடப்பெற்ற தலங்களில் ஒன்றாகும். இது தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரது பாடல் பெற்ற இத்தலம் காரைக்காலில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது நம்பிக்கை ஆகும். இங்குள்ள சனிபகவான் சன்னிதி பிரசித்தி பெற்றதாகும். சப்த விடங்கத் திருத்தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது.
            கோவில் வரலாறு :
               தமயந்தி எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளன் எனும் நிடத நாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனை துன்புருத்த வற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார். அவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார்.
              எனவே நளனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் சனீஸ்வரன் என்ற பெயர் தாங்கி அருள்பாலிக்கின்றார்.
          கோவில் அமைப்பு :
          நான்கு வீதிகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது. உயர்ந்த ராஜகோபுரமும் அதற்கு முன்புள்ள முற்றம் மண்டபமாக உள்ளது. இங்கு வடபுறம் அலுவலகமும் தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது. விசாலமான பிராகாரத்துடனும், உயர்ந்த சுற்றுமதில்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது.
              சுவரில் நளன் வரலாறு வண்ண ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் உள்ளது. சனி பகவான் சன்னிதி முன்னால் மகர, கும்பராசிகளின் உருவங்கள் உள்ளன. மகர, கும்பராசிகளுக்குச் சனி அதிபதியாவார்                             
          அதையடுத்து அம்பாள் சன்னிதி உள்ளது. உற்சுற்றில் சுந்தரர், அறுபத்துமூவர் மூல உருவங்கள் உள்ளன. வரிசை முடிவில் நளன் வழிபட்ட நளேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரம்மனும், துர்க்கையும் உள்ளனர். சொர்ண கணபதி சன்னிதி தலவிநாயகர் சன்னிதியாகும்.
            சப்தவிடங்கத் தலசிவலிங்கத் திருமேனிகளும், சுப்பிரமணியர் சன்னிதியும், ஆதிசேஷன், நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சன்னிதிகளும் உள்ளன. படிகளேறிச் செல்லும்போது பலிபீடம் சற்று விலகியிருப்பதைக் காணலாம்.
            தினந்தோறும் ஆறுகால வழிபாடுகளும் நடைபெறும். மேலும், வைகாசியில் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
            பரிகாரங்கள் :
               சனித்தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வானி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்து கொள்ளலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
          களத்திர தோஷம் நீங்க..! சுமங்கலி பெண்களுக்கு துணி வகைகள், தேங்காய், பூ, பழம், தாலிக் கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெற்றால் களத்திர தோஷம் நீங்கும்.
                அன்பு ஆத்மா .சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக